கிராபிக்ஸ் கலக்கலா ? அம்புலி மாமா கதை ? ..ஈ நான்
மகாதீரா வழங்கியவர்களால் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு தமிழுக்கும் இறக்குமதி ஆகியிருக்கும் சமீபத்திய திரைப்படம் நான் ஈ… கொஞ்சம் லேட்டாகத்தான் இந்தப்படத்தைப் பார்க்க இயன்றது. படம் ஆரம்பத்திலேயே ஒரு குழந்தைக்கு அப்பா கதைசொல்லும்படியாக அமைந்திருப்பதால் இதனை லாஜிக் மீறல் என்று பாராமல் திரைக்கதையை நேர்த்தியாக அமைத்திருப்பதையும், கிராபிக்ஸ் நேர்த்தியையும் பாராட்டியே தீரவேண்டும்.
காதலும் மோதலுமே இந்தப்படத்தின் முக்கிய ஜீவன்.. ஆரம்பத்தில் எதிர்வீட்டுப் பையனை ( புத்திசாலி… கரண்ட்கட் ஆனாலும் கூட காதலிக்காக, டிஷ் ஆண்டெனாவில் ஜிகினா பேப்பரைப் பொருத்தி, டார்ச் லைட்மூலம் காதலியின் பிளாட்டில் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சும் ஐடியா சூப்பர்..) லுக் விடும் கதாநாயகி, ( தான் நடத்தும் சாரிட்டி நிறுவனத்திற்கு நிதி கேட்க செல்லும் தொழில் அதிபர் கம் கடத்தல் கொலைக்கார பாஸ், கதாநாயகியின் அழகில் மயங்கி 15 லட்சத்திற்கு செக் கொடுத்து, அடிக்கடி கதாநாயகியின் தொடர்பு இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்.) ஒரு சமயம், கதாநாயகி தன்னை சட்டை செய்யவில்லை அதற்கு மாறாக எதிர்வீட்டு பையனை காதலிக்கிறார் என்று தெரிந்து எதிர்வீட்டு பையனை தூக்கி கொல்லும் சமயம், கதாநாயகி தனது காதலை தெரிவிக்க தொடர்பு கொள்ளுகிறார்.. இதனால், உயிர் இழந்த கதாநாயனின் ஆவி ? ஒரு ஈயின் முட்டையில் புகுந்து கொள்கிறது.. கதாநாயகி, நாயகன் ஆகியோர் நல்ல தெரிவு.. வில்லனும் சிறப்பாக தனது பங்கை செய்திருக்கிறார். அதிலும், நயமாக பேசி தனது பிஸினஸ் பார்ட்னரை பேனா முனையால் குத்தி கொலை செய்வது நல்ல திருப்பம்..
படிப்படியாக தான் ஒரு ஈயாக உருமாறி வந்திருப்பதை, கதாநாயகிக்கும், வில்லனுக்கு ஏகப்பட்ட குடைச்சல்களைக் கொடுத்தும், கடைசியில் தன்னுயிரை மாய்த்தாவது வில்லனை முழுவதும் அழிப்பதே கதை.. இடையில் ஒரு சில காட்சிகளில் சந்தானம் காமெடி விஜயம்… ஈ டான்ஸ் ஆடுவது, கூடையில் வெடிமருந்தைத் தூக்கி செல்வது போன்றவைகள் கொஞ்சம் ஓவர்தான் இருந்தாலும் லாஜிக் என்பதை மறந்து அம்புலிமாமா கதை கேட்பது போல் நான் ஈயையும் பார்க்கலாம். இசை சுமாராக இருந்தாலும், ஒளிப்பதிவு மற்றும் பிற அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது.
கொசுறு.. இந்த இயக்குநரே… மகாபாரதத்தை திரைப்படமாக அடுத்த பத்தாண்டுகளுக்குள் புதிய கோணத்தில் எடுக்க இருப்பதாகவும், இவருடைய மனைவியே இவரின் வித்தியாசமான கதைக்களனை தெரிந்தெடுக்க உதவி செய்வதாகவும் தெரிவிக்கிறார்.