THIRUPATHI LADDU THINNA ASAIYA
ஆமாம்பா.. ஆமாம். இந்த பொங்கல் லீவுக்கு உடு ஜீட்ன்னு எல்லாரும் திருப்பதிக்கு போய்ட்டோம்.. அங்க போனப்பறம்தான் தெரியுது நம்மளைப்போலவே எல்லாரும் கிளம்பி வந்திருக்காங்கன்னு.. 300 ரூபா டிக்கட் வாங்கினவங்கெல்லாம் 12 மணிநேரமும், இலவசமா தரிசனம் செய்ய நினைக்கிறவங்களெல்லாம் 25 மணிநேரமும் காத்திருக்காங்க. வீட்ல மொட்டையடிச்சே ஆகனும் சொன்னதால அங்கே போனா அங்கே ஒரு 4 மணிநேரம் கூண்டுலே அடைக்கப்பட்டோம். பொங்கல் பண்டிகையை யொட்டி பல பணியாளர்கள் லீவுலே போய்ட்டதால 100 பேர் மொட்டையடிக்க இருந்தாங்கன்னா, அதுலே 20 பேர் மட்டுமே வேலை செய்துகிட்டு இருக்காங்க.
மொட்டையடிக்க இலவசமா பிளேடு தர்றாங்க, ஆனால் மொட்டையடிப்பவருக்கு கண்டிப்பா 10 ரூபா தந்தே ஆகனும். இல்லேன்னா இரத்தக்காயம் கண்டிப்பா உண்டு. அதுமட்டுமல்ல, இலவச செருப்பு, லக்கேஜ் வைத்தாலும் எடுத்தாலும் 10 ரூபா பணியாளருக்கு கொடுத்தே ஆகனும், ஆனால், இலவசமாக 1 மற்றும் 2 பாத்ரூம் வேணா போய்க்கலாம். எங்கே பார்த்தாலும, விஜிலென்ஸ் மற்றும் போலீசார் வலம் வந்து கொண்டே இருக்கிறார்கள். அப்பிடி இருந்தும் ?
அப்பா என்னா ஒரு தேஜஸ் (சாமிக்கு) கஷ்டப்பட்டு க்யூ (எங்கே போனாலும் க்யூதான்… இடையில் புரியாத பாஷையை பேசிக்கொண்டே ஒரு சில கும்பல்கள் புகுந்துவிடுவதும் சாதாரணமாக உள்ளது) பல பாஷைகள், பல மாநிலங்கள் ஒரு தேசிய ஒருமைப்பாடு அங்கே நிலவுவது கண்கூடு.
அப்புறம் ஒரே தள்ளுமுள்ளு பண்ணி வெங்கியை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தா கும்பல் உடனே வெளியே வராம, அங்கேயே ஒரு ஓரமா உட்கார்ந்து விடுகிறார்கள். இன்னமும் நன்றாக திட்டமிட்டால் மிக விரைவாக பலர் சாமியை தரிசனம் செய்ய வழியுண்டு. ஏண்ணா, உள்ளே நுழைவதும், வெளியே வருவதும் ஒரே வழிதான் அதனால் கும்பல் கும்பலாக கூடி நிறைய நேரம் விரையமாகிறது.
பிரசாதம். சூப்பர்.. லட்டுக்கு முன்னால் புளியோதரையே திருப்பதி வெங்கிடாஜலபதியின் பிரசாதமாக இருந்தது என கூறியதால், உடனே இலவச லட்டை நிறுத்திவிட்டு, புளியோதரையை வழங்கிவருகிறார்கள். சுவை மிக அருமை. லட்டு தயாரிக்க இயந்திரங்கள் வந்துவிட்டதால், தயாரித்து உடனே கன்வேயர் மூலமாக கோவிலுக்குள்ளே அனுப்பி உடனே, திரும்ப பெறுகிறார்கள். வேனுங்கற அளவுக்கு (ஒருவருக்கு 4 லட்டு வீதம்) வாங்கி கொள்ள வழிவகுத்திருக்கிறார்கள். (ரூ.25 வீதம்) நாங்களே 20 லட்டு வாங்கினோம் (அப்போ நாங்க எத்தனை பேர் போனோம் தெரியுதா?)
சுத்தமோ சுத்தம், முன்பைவிட இப்போ நல்லா பராமரிக்கிறாங்க, எங்கோ பார்த்தாலும் சுத்தம், அதைவிட கீழ்த்திருப்பதி பஸ்ஸ்டாண்ட் கூட சுத்தம் (விழித்துக்கொண்டது கார்ப்பரேஷன்) பஸ்ஸெல்லாம் ஒரே கூட்டமுங்க ஒரு பஸ்வந்தா 3 பஸ்க்கான கூட்டம் அம்முது.
அலமேல்மங்காபுரம் கிட்டத்தட்ட திருப்பதி மாதிரியே பராமரிக்கப்படுது.. இந்தமுறை இலவச சாப்பாட்டை சாப்பிடும் பாக்கியம் கிட்டியது. சாப்பாடு நன்று.. சுத்தமாக பராமரித்தாலும், நமது பக்கத்தில் உட்காரும் ஆசாமி அழுக்கு என்றால்? சிக்கல்தான். கோவிலில் புளியோதரையே பிரசாதம்.. ஆனால் 20ரூபாய்க்கு 2 லட்டு என்ற பெயரில் கடமைமாவு உருண்டையை கொடுத்து கொடுமை செய்கிறார்கள்.
கீழ்த்திருப்பதி கோவிந்தராஜீ சன்னதியில் பல சாமிகள்.. ஒவ்வொரு சாமிக்கும் 10ரூபா எடுத்து வைத்துக்கொள்ளவும், கிட்டத்தட்ட 60 ரூபா காலி. வெளியே வந்தால் கண்களை மிண்னும் எல்இடி சாமிக்கூட்டம் (கடையில்) நாங்களும் ஞாபாகார்த்தமாக ஒன்னை வாங்கினோம் 400ரூபா சொன்னதை பேரம் பேசி 250ரூபாய்க்கு வாங்கினோம். பல கடைகளை வேடிக்கைபார்த்துக்கொண்டே வெளியே வந்தோம்… அதில் ஒரு கடைக்கு இந்த கதி நேரும் என எதிர்பார்க்கவில்லை. அன்று மாலை 6 மணியளவில் ஒரு சாமிக்கூட்டம் கடை எரிந்து 5 லட்சம் நாசம் என வீடுவந்து பேப்பரைப்பார்த்து தெரிந்து கொண்டு வருத்தம் அடைந்தோம். சரவணபவன் ஓட்டல், கீழ்த்திருப்பதி விலையெல்லாம் சென்னை அளவிற்கு இருக்கும் என பயந்து கொண்டே குறைவாக சாப்பிட்டோம் ஆனால் எதிர்பார்த்ததை விட பாதியளவிற்கே இருந்தது. சுவையும் நன்று. கடையும், கலர்கலர் லைட்கள் போட்டு அருமையாக இருந்தது. மினிடிபன் கேட்டு காத்திருந்தோம் வந்ததோ.. மினிஇட்லிகள்.. இதுதான் இருக்காம்.
நாங்களும் அந்த சிறுத்தையை சந்தித்தோம்… (அடுத்த பதிவில் விபரம்..)